கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கு காவல்துறை அனுமதி, பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. திமுக தரப்பு, “விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்குக் காரணம்” என்றும், தவெக காவல்துறை விதிகளை மீறியது என்றும் குற்றஞ்சாட்டுகிறது. மறுபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர், “தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை” என்று விமர்சித்துள்ளனர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக வழக்கறிஞர் அறிவழகன், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக துணை நிற்கும். காவல்துறை விதிகளை நாங்கள் மீறவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
நேற்று, தவெக தலைவர்கள் நீதிபதி தண்டபாணியை அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்: சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது தமிழக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



