சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தத் துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் எப்போது கரூர் செல்வார்..?
சம்பவம் நடந்த பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் புறப்பட்டுச் சென்றது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஒரு சமூக வலைத்தள வீடியோ வெளியிட்டார். அதில், கரூர் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதனால், அவர் எப்போது கரூர் செல்வார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது வருகிறது.
விஜய்க்கு பயம் கிடையாது :
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் நீண்ட கால நண்பரும் நடிகருமான சஞ்சீவ், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் சஞ்சீவிடம் கரூர் சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், ஊடகங்களைச் சந்திப்பதற்கு விஜய்க்கு தைரியம் உள்ளதா? என்றும் கேட்டனர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவ், “அவருக்குப் பயமெல்லாம் கிடையாது. சரியான நேரம் வரும்போது அவர் ஊடகங்களைச் சந்தித்து பதில் அளிப்பார்” என்று அவர் தெரிவித்தார். சஞ்சீவின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, கரூர் சம்பவம் குறித்து விஜய் எப்போது ஊடகங்களைச் சந்திப்பார், எப்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.