விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பாலா. இவர் ஏழை மக்களுக்கு சைக்கிள், ஆட்டோ, தையல் இயந்திரம் போன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார். ஆனால், அவரது மாத சம்பளத்திற்கு மீறிய அளவில் அவர் செய்யும் உதவிகளின் பின்னணி குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பத்திரிகையாளர் உமாபதி ஒரு யூடியூப் நேர்காணலில் கூறுகையில், KPY பாலாவின் வீடியோக்கள் ‘ஸ்கிரிப்டட்’ எனவும், பல உதவிகளுக்குப் பின்னால் சில சர்வதேச அரசியல் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நடிகர் கூல் சுரேஷ் ஒரு பொது மேடையில், “இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியது இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது.
சமூக வலைதளங்களில், பாலாவின் உதவிகளுக்கான நிதியை நிர்வகிக்கும் டிரஸ்டுகள் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, பாலா விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாகவும், 2026 தேர்தலில் புதுச்சேரி காரைக்கால் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வதந்திகள் குறித்து பாலா அல்லது தவெக தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், இந்த வதந்திகள், பாலாவின் நிதியுதவிகள் குறித்த சர்ச்சைகளுக்கு புதிய கோணத்தை கொடுத்துள்ளன. சில இணையவாசிகள், பாலாவின் அரசியல் பிரவேசத்தை அறிந்தவர்கள்தான் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக கூறி வருகின்றனர்.