வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் கஷ்டம் வரும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைப்பார்கள். ‘சிரிக்கும் புத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த சிலை, மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் இருப்பதால், இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்றும், நமது முகத்தில் சிரிப்பு வந்து அதுவே உண்மையான அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.
குபேரர் சிலையை எங்கு வைப்பது..?
குபேரர் சிலையை சரியான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். காலையில் எழுந்ததும் அச்சிலையை பார்த்தால் அந்த நாள் அதிர்ஷ்டமாக அமையும் என்பதால், வீட்டின் கதவுக்கு அருகில் வைப்பது வாஸ்து படி சிறந்தது. இதனால் வீட்டிற்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் அச்சிலையை பார்க்க முடியும்.
சிலையை கண்ட இடத்தில், குறிப்பாக தரையில் அல்லது இருண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அழகுக்காக டி.வி, பிரிட்ஜ் மற்றும் காலணிகள் வைக்கும் இடங்களில் வைக்க கூடாது என்றும் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த சிறிய மாற்றங்கள் கூட வீட்டிற்குள் நேர்மறை சக்தியை அதிகரித்து, மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொண்டு வர உதவும் என நம்பப்படுகிறது.