இனிப்பான மற்றும் குளிர்ச்சியான சுவையுடன் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட குல்கந்து, நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இது, பொதுவாக வயிற்று எரிச்சலை தணிப்பது, வாய்ப்புண்களை குணப்படுத்துவது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பலன்களைத் தரக்கூடியது. அத்துடன், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், குல்கந்தை அனைவரும் சாப்பிட முடியாது. குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
குல்கந்தை தவிர்க்க வேண்டியவர்கள் யார்..?
வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அஜீரணம் போன்ற செரிமானக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் குல்கந்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குல்கந்து செரிமானப் பாதையில் மேலும் எரிச்சலை உண்டாக்கி, இந்தப் பிரச்சனைகளை மோசமாக்கலாம்.
குல்கந்து அதிக அளவில் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்ப்பது கட்டாயமாகும். இல்லையெனில், இது ரத்த சர்க்கரை அளவை மிக வேகமாக அதிகரித்து, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரையை கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்தில் கலோரிகள் அதிகம் இருக்கும். எனவே, இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எடை அதிகமானால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதால், உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் குல்கந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குல்கந்து இயற்கையிலேயே குளிர்ச்சியான தன்மையை கொண்டிருப்பதால், சளி அல்லது இருமல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இதைச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் மேலும் தீவிரமடையலாம்.
சிலருக்குப் பூக்களின் மகரந்தங்கள் அல்லது ரோஜா இதழ்களுக்கு ஒவ்வாமை (Allergy) இருக்கலாம். அத்தகையவர்கள் குல்கந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம். மீறிச் சாப்பிட்டால், சருமத்தில் அரிப்பு, தடிப்புகள், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், பல் சொத்தை அல்லது வேறு ஏதேனும் வாய் சுகாதாரப் பிரச்சினை உள்ளவர்களும் குல்கந்தை அதிகம் சேர்க்கக்கூடாது. அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, வாய்வழி சுகாதாரப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலே குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு இல்லாதவர்களும் கூட, குல்கந்தை மிதமான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகிய பிறகே இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : தந்தூரி, கிரில் சிக்கன் பிரியரா நீங்கள்..? கேன்சர் வரும் அபாயம்..!! மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை..!!



