தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் அடையாளமாகவும், பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்த அரசே, நிலமற்ற பெண்களுக்கு மானியத்தின் மூலம் நிலம் வாங்கி கொடுக்கும் நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் நிலம் வாங்குவதற்கான செலவில் 50% வரை அல்லது ரூ.5 லட்சம் வரைக்கும் அரசால் மானியமாக வழங்கப்படுவது தான்.
இதன்மூலம், ஒரு பயனாளர் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்க முடியும். மேலும், பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணங்களில் இருந்து முழுமையான விலக்கும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதுவே, நில வாங்கும்போது, ஏற்படும் நிதிச் சுமையை பல மடங்கு குறைக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு இருக்க வேண்டும். மேலும், நிலம் இல்லாதவராகவும், விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாகவும் இருப்பது அவசியம்.
இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை, வாங்கிய நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யவோ அல்லது பெயரை மாற்றவோ முடியாது. மேலும், ஏற்கனவே TAHDCO திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருப்பவர்கள், இந்த வாய்ப்பில் பங்கு பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தகுதியுள்ள பெண்கள் www.tahdco.com எனும் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலமாகவோ அல்லது மாவட்ட தாட்கோ அலுவலகங்களை நேரில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.



