இந்திய பெண்களின் தொழில்முனைவு ஆர்வம் சமீப காலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை கவனிப்பது மற்றும் ஒருபுறம் வேலை அல்லது வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது எனப் பல பணிகளைச் சமன் செய்யும் ஆற்றல் பெண்களிடம் இயல்பாகவே உள்ளது.
இன்றைய பெண்கள் பலர், இந்தச் சவால்களைச் சமாளித்து, தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகச் சிறிய அளவிலான வணிகங்களை வீட்டிலிருந்தே நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தே தொழில் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் சௌகரியமான ஒன்றாக இருக்கிறது.
பாரம்பரியத் தொழில் :
ஒரு காலத்தில், நம் பாட்டிமார்களும் தாய்மார்களும் புடவை வியாபாரம், பலகாரங்கள் தயாரித்தல், பூ கட்டுதல் போன்ற சிறு தொழில்களை ரகசியமாக செய்து, அதில் வரும் வருமானத்தை சேமித்து அவசர காலங்களில் குடும்பத்திற்கு உதவினர். இன்று, அதே உழைப்பும் திறமையும் ஆன்லைன் தளங்கள் மூலம் இன்னும் நவீன வடிவத்தைப் பெற்றுள்ளன. சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில், பெண்கள் புடவை விற்பனை, ஆரி வேலைப்பாடுகள், இயற்கையான கூந்தல் தைலங்கள் மற்றும் சோப்புகள் தயாரித்தல் எனப் பல வணிகங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வணிகம் செய்வதற்கு தேவைப்படும் பொறுமை, சரியான நேரம் வரை காத்திருப்பு மற்றும் சந்தைத் திட்டமிடல் ஆகிய மூன்று பண்புகளும் பெண்களுக்கு இயல்பாகவே கைவருவதால், அவர்கள் குறுகிய காலத்திலேயே தொழிலில் உச்சத்தை அடைகிறார்கள். வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் மீண்டும் போராடும் மன உறுதி பெண்களுக்கு அதிகம். ‘காபி டே’ சாம்ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த மாளவிகா ஹெக்டே போன்ற பல பெண் தொழில்முனைவோர் இன்று உலகளவில் லாபத்தை ஈட்டி வருகின்றனர்.
வீட்டு சமையலறையே ஒரு முதலீடு :
சின்ன முதலீட்டில் தொடங்கி, லாபம் ஈட்டும் வணிகங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘கிளவுட் கிச்சன்’ (Cloud Kitchen) முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு இந்தத் தொழில் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. ஹோட்டல் ஆரம்பிப்பதை விட இது மிகவும் பாதுகாப்பான வணிக முறையாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் பிரபலமான இந்த வணிக மாதிரி, இப்போது சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சக்கைப்போடு போடுகிறது.
கிளவுட் கிச்சன் என்றால் என்ன..?
வீட்டு சமையலின் சுவையை மிஸ் செய்யும் வெளியூர்வாசிகள், மாணவர்கள், மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் உணவு வணிகமே கிளவுட் கிச்சன். இதில், அதிக மசாலாக்கள் சேர்க்காமல், வீட்டில் சமைத்தது போன்ற சுவையுடனும், ஹோட்டலை விடக் குறைந்த விலையிலும் உணவைத் தயாரித்து வழங்கலாம். இந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க, ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செயலிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஆர்டருக்கான கமிஷன் தொகை போக மீதம் உள்ள பணம் உங்களுக்கு லாபமாக வந்து சேரும்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் :
கிளவுட் கிச்சன் தொடங்க, உங்கள் வீட்டுச் சமையலறையே போதுமானது. அல்லது 50 முதல் 300 சதுர அடி கொண்ட ஒரு சிறிய இடத்தை அமைத்துக்கொள்ளலாம். புதிய பாத்திரங்கள் மற்றும் ஆரம்ப சமையல் பொருட்களுக்கு என சுமார் ரூ. 30,000 முதலீடு இருந்தால் போதும். தனியாக இடம் எடுத்து ஆரம்பித்தால், அது ரூ.50,000 வரை தேவைப்படலாம்.
வெற்றிக்குத் தேவையான முக்கியப் படிகள்:
* உங்கள் கிச்சனுக்கு ஒரு பெயரிட்டு, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தொடங்கவும்.
* வாடிக்கையாளர்கள் பொதுவாக சுட்டிக்காட்டும் ஒரே குறை, உணவின் பேக்கிங் தான். டெலிவரி சமயத்தில் உணவு கலக்காமல் இருக்க, தரமான பேக்கிங் மிக அவசியம்.
* உணவு டெலிவரி செயலிகளைத் தாண்டி, அருகில் உள்ள அலுவலகங்கள், சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றை நேரடியாக அணுகி, மொத்த ஆர்டர்களை பெறுவதன் மூலமும் லாபத்தை அதிகரிக்கலாம்.
தொடர்ந்து புதிய மெனு வகைகளைச் சேர்ப்பது, வாராந்திரச் சலுகைகள் மற்றும் மாதச் சந்தா பேக்குகள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம், கிளவுட் கிச்சன் வணிகத்தில் முதலீடு குறைவு. ஆனால் லாபம் அதிகம் ஈட்ட பல வழிகள் உண்டு.



