விவசாயக் கூலிகளாக இருக்கும் ஏழை, எளிய பெண்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ என்ற ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இத்திட்டத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே எளிமையாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் :
தாட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* இத்திட்டத்தின் கீழ் 2.5 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கிக்கொள்ளலாம்.
* அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.
* 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
* இந்த நிலத்தை 20 ஆண்டுகளுக்கு விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது.
கூடுதல் சலுகைகள் :
இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் பெண்களுக்குப் பல சலுகைகள் உண்டு. நிலத்தைப் பதிவு செய்வதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்பு, ஆழ்துளைக் கிணறு மற்றும் பம்ப் செட் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது.
விண்ணப்பிப்பதில் இருந்த சிரமங்களைக் குறைக்கும் வகையில், தாட்கோ நிறுவனம் இந்த புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
Read More : OTT-யில் வெளியானது “கூலி”..!! எந்த தளத்தில் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!!



