அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்றிரவு 2 டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதிக்கொண்டன. ஒரு விமானம் லாகார்டியாவின் வாயிலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது மற்றொரு டெல்டா பிராந்திய ஜெட் விமானம் அதன் மீது மோதியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மோதிய தருணத்தைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது..
டெல்டா பிராந்திய ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் தரையிறங்கிய பிறகு மற்றொரு விமானம் அங்கு வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் லாகார்டியா விமான நிலையத்தின் வாயிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக, விமான விபத்தின் ATC ஆடியோவை மேற்கோள் காட்டி ABC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 9:56 மணியளவில் பிராந்திய ஜெட் விமானம் மற்றொரு ஜெட் விமானத்தின் இறக்கையுடன் மோதியதால், அதன் இறக்கை கழன்று விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களும் மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, விபத்தில் சிக்கிய விமானங்கள் டெல்டா விமானங்கள் DL5047 மற்றும் DL5155 ஆகும். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்குப் பிறகு, நியூயார்க் நகரத்தில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக லாகார்டியா உள்ளது. இங்கு பெரும்பாலும் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.