கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுனரான ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டியானது ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளியே வந்தது. இதனையடுத்து பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் என அறிவித்தார். தேர்தல் ஆணையத்திலும் கடிதம் கொடுத்தார். ஆனால் அன்புமணியோ பாமக தலைவராக தான் நீடிப்பதாகவும் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது. இந்த நிலையில் வன்னியர் சமூதாய மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 3 பாமக எம்.எல்.ஏக்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார். சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.தி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு
இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழுமுன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆதராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பாகிஸ்தானின் கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா..? விவாதத்தை கிளப்பிய செயற்கைக்கோள் படங்கள்