இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம்.
ஆபரணமா? ETF-ஆ?
வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக மாற்றுவதா என்பதுதான். தேவை இருந்தால் மட்டுமே வெள்ளிப் பொருட்களை வாங்கலாம். ஆனால், வெறும் முதலீட்டுக்காக என்றால், வெள்ளி இ.டி.எப் (Exchange Traded Fund) தான் சிறந்த வழி. வெள்ளிப் பொருட்களை வாங்கும் போது, ஜிஎஸ்டி வரி மற்றும் சில கூடுதல் செலவுகள் ஏற்படும். இதனால், வருங்காலத்தில் விற்கும் போது, லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெள்ளியின் விலை ஏன் உயர்கிறது..?
சந்தையில் வெள்ளியின் விலை கணிசமாக உயர இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையும் போது, முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கி திரும்புவது வழக்கம். இரண்டாவதாக, எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் பலவும் வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்வதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், வெள்ளி இ.டி.எப்.களில் முதலீடு செய்வது, நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், முதலீட்டுச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி அமைப்பானது, கடந்த 2022-ஆம் ஆண்டு வெள்ளி இ.டி.எப்.களை அறிமுகப்படுத்தியது. தங்கத்தின் விலை போல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதால், முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெர்மனி மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலக அளவில் வெள்ளி முதலீட்டில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளியின் விலை உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி இ.டி.எப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உங்கள் முதலீட்டுப் பட்டியலில் வெள்ளிக்கும் ஒரு இடம் கொடுத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் அதன் பளபளப்பு உங்கள் முதலீட்டிலும் பிரதிபலிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர்.