சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், மறுபுறம் வெள்ளியின் விலையும் அபரிமிதமான ஏற்றத்தை கண்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், வெள்ளி விலை தற்போது பெரிய உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி (அக்.1), ஒரு கிராம் வெள்ளி ரூ.161 என்ற விலைக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையேற்றம் இந்த ஆண்டு அபரிமிதமாக இருந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் வெள்ளியின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.60,300 வரை அதிகரித்துள்ளது.
இது, சுமார் 67.22 சதவீத ஏற்றத்தை குறிக்கிறது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.89,700 ஆக இருந்த நிலையில், இந்தச் சில மாதங்களில் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், முன்னதாக வெள்ளியை வாங்கத் தவறியவர்கள் தற்போது வருத்தமடைந்துள்ளனர்.
வெள்ளியை நோக்கி முதலீட்டாளர்கள் ஆர்வம் :
பங்குச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, மக்கள் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுவதால், மக்கள் பல்வேறு வழிகளில் வெள்ளியை வாங்கி சேர்க்கின்றனர். நிலையற்ற சந்தை, அதிகரித்து வரும் தேவை மற்றும் முதலீட்டில் வெள்ளி நல்ல லாபத்தை அளிப்பது ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தில் இருந்து வெள்ளிப் பக்கம் திரும்பச் செய்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) எதிர்காலத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது என்பதும் உலோகங்களின் விலையை அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.
இனி பொருட்களின் விலை உயருமா..?
வெள்ளியின் தேவை அதிகரிப்பதற்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், தொழில்துறையும் ஒரு முக்கிய காரணம். வெள்ளி அதிகளவில் மின்னணு சாதனங்கள், சோலார் பேனல்கள், வாகனங்கள் மற்றும் பிற தொழில்துறை பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளியின் விலை உயர்வதால், இந்தப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் காலங்களில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளதால், இடிஎஃப் (ETFs) மற்றும் வெள்ளி நாணயங்கள் போன்ற வழிகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.



