கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த குர்விந்தர் சிங்கின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால், ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதனால், காவல்துறையினர் ரூபிந்தர் கவுரை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், அவர் கூறிய கொள்ளைச் சம்பவம் ஒரு பொய் நாடகம் என்பது தெரிய வந்தது. ரூபிந்தர் கவுர், தனது காதலனுடன் சேர்ந்துதான் கணவர் குர்விந்தர் சிங்கை கொலை செய்தது தெரியவந்தது.
தன் கள்ளக்காதல் குறித்து கணவர் குர்விந்தர் சிங்குக்குத் தெரிய வந்ததும், இருவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர், காவல்துறையை திசை திருப்புவதற்காகவும், கொலையை மறைப்பதற்காகவும், கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து கணவரை கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக ஒரு பொய்யான கதையை தயாரித்து நாடகமாடியதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
ரூபிந்தர் கவுரும் அவரது காதலனும் வெளிநாட்டில் இருந்தபோது, ஒரு ஆன்லைன் தளம் மூலமாக சந்தித்துள்ளனர். அதன் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் பஞ்சாபிற்கு திரும்பிய பின்பும், அவர்களது கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளனர். தற்போது இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரூபிந்தர் கவுர் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



