உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.. அதன்படி உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம்.. அரசு என்ன செய்தது? என்ன செய்ய வேண்டும்? 2030-க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும் என கேள்வி கேட்டு பதிலை பெற உள்ளது.. இந்த திட்டத்தை வரும் 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்..
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை! இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் ‘PEN’ நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது. இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக ‘PEN’ நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.
மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும். அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



