உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 20 வயது அகன்க்ஷா என்ற பெண்ணுடன் கடந்த 10 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சூரஜ் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்தது அகன்க்ஷாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியை நாடி இருவரும் சேர்ந்து, அகன்க்ஷாவின் உடலை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து, சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யமுனை ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில், சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியதுதான் போலீசாரின் விசாரணைக்கு முக்கியத் தடயமாக இருந்தது.
இந்நிலையில், அகன்க்ஷாவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சூரஜின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புகைப்படம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை விசாரித்தபோது, சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என்பது உறுதியானது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அகன்க்ஷாவின் உடலை யமுனை ஆற்றில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.