கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன், டேட்டிங் ஆப் மூலம் திண்டுக்கல் காவல்துறை டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன் தனுஷுடன் அறிமுகமானார்.
பின்னர், இவர்களுக்கு இடையேயான பழக்கம் அதிகமான நிலையில், தனுஷ் அந்த இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் சேர்ந்து மிரட்டி, அந்தப் பெண்ணிடம் இருந்து தலா ஒரு பவுன் மோதிரம், செயின் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். மேலும், ஆன்லைன் மூலம் அவரிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயையும் பெற்றுள்ளார்.
பிறகு, தனுஷ் அந்தப் பெண்ணை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரு அறை பதிவு செய்து அனுப்பி வைத்தார். ஓட்டலில் இருந்து தனது சகோதரியை தொடர்பு கொண்ட இளம்பெண், நடந்த சம்பவத்தைக் கூறி, இருவரும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் நடத்திய விசாரணையில், மோசடி செய்தவர் திண்டுக்கல் டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன் தனுஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான தனுஷை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்தனர்.
விசாரணையில் தனுஷ் குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை ஈச்சனாரிப் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த தனுஷுக்கு, அதில் போதிய வருமானம் இல்லை. இதனால், அவர் ‘பம்பிள்’ உள்ளிட்ட டேட்டிங் ஆப்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை குறிவைத்து தனது முழுநேர தொழிலாக இந்த மோசடியை செய்து வந்துள்ளார்.
தனுஷ் விதவிதமான கவர்ச்சியான படங்களை தனது புரொபைல் படமாக பயன்படுத்தி, பெண்களை மயக்கிப் பேசியுள்ளார். அவர்களிடம் தான் ஒரு வழக்கறிஞர் என்றும், கோவை அரசு வழக்கறிஞருக்கு உதவியாளராக இருப்பதாகவும், தனது தந்தை போலீஸில் உயர் அதிகாரி என்றும் பொய்களை கூறி நம்ப வைத்துள்ளார். சாதாரணக் குடும்பப் பெண்களை குறிவைத்து நைஸாகப் பேசி, ‘லாங் டிரைவ்’ செல்லலாம் என்று காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
காரின் பின் சீட்டில் நண்பரை மறைவாக அழைத்துச் சென்று, சரியான சந்தர்ப்பத்தில் பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் மானம் கருதி புகார் அளிக்காமல் இருந்ததால், தனுஷின் செயல் தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.
தனுஷின் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சதி செயலுக்குத் துணையாக இருந்த தனுஷின் நண்பரையும் தேடி வருகின்றனர்.



