வரலாற்று–ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட மாவட்டங்களில் புதுக்கோட்டை முதன்மையானது. கோட்டைகள், குகை ஓவியங்கள், குடைவரைக் கோவில்கள், கல்வெட்டுகள் என தமிழக வரலாற்றின் பல அடுக்குகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த மாவட்டத்தில், நார்த்தாமலை ஒரு மௌன சாட்சியாக நிற்கிறது.
புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நார்த்தாமலை, ஒன்பது சிறிய மலைக்குன்றுகளால் சூழப்பட்ட ஒரு வாழும் வரலாறு. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை உள்ளிட்ட மலைத் தொடர்கள் இயற்கை அழகின் உச்சத்தை வெளிப்படுத்தினாலும், இம்மலையின் மடியில் மறைந்திருக்கும் ஆன்மிக அதிசயம் தான் “நீருக்குள் மூழ்கிய சிவலிங்கம்”.
மேலமலைக்கு செல்லும் வழியில் உள்ள தலையருவி சிங்கம் சுனை என்ற இயற்கை நீர்த்தொட்டி, சாதாரண சுனையாகத் தோன்றினாலும் அதன் அடியில் இயங்கும் வரலாறு அசாதாரணமானது. சுமார் 15 அடி ஆழமுள்ள இந்த சுனையின் உள்ளே அமைந்துள்ள ஜீரஹரேஸ்வரர் குடைவரைக் கோவில், பாறையில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்துடன் இன்றும் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் தரிசனம் அளிப்பது, பக்தியையும் வியப்பையும் ஒருசேர அளிக்கிறது.
இந்தக் கோவிலின் சிறப்பம்சம், அதன் அமைப்பு மட்டுமல்ல; அதன் வரலாறும் தான். 1857ஆம் ஆண்டு ராமச்சந்திர தொண்டைமான் அரசவளத்தினரின் காலத்தில், ராணி இந்த சுனையிலிருந்து நீரை இறைத்து சிவலிங்கத்தை தரிசித்ததாக கூறும் கல்வெட்டு, இத்தலத்தின் தொடர்ச்சியான ஆன்மிக வழிபாட்டை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இன்று, சுனை எப்போதும் நீரால் நிரம்பியிருப்பதால், இவ்வரலாற்றுப் பெருமை பலருக்குத் தெரியாமலேயே உள்ளது.
இதனாலேயே, ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் உள்ளூர் மக்கள் ஒன்று கூடி, மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி, எளிய முறையில் சிவலிங்கத்தை தரிசித்து வழிபடும் மரபு தொடர்ந்து வருகிறது. அரசு விழாக்களோ, பிரம்மாண்ட ஏற்பாடுகளோ இல்லாமல், மக்கள் நம்பிக்கையால் மட்டும் நடத்தப்படும் இந்த வழிபாடு தான் நார்த்தாமலையின் தனிச்சிறப்பு.
Read more: கடனில் இருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..?


