இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பல சமயங்களில் இந்த முக்கியமான அட்டை தொலைந்து போனால் அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டால் மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாகின்றனர். ஆனால், ஆதார் எண் இல்லாவிட்டாலும் கூட, தொலைந்த உங்களது இ-ஆதாரை (e-Aadhaar) மீட்டெடுக்க முடியும் என்றும், சில நிமிடங்களில் புதிய பி.வி.சி. (PVC) அட்டையைப் பெற முடியும் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் எண்ணை வீட்டிலிருந்தே மீட்டெடுப்பது எப்படி..?
உங்களது ஆதார் அட்டை எண் நினைவில் இல்லை என்றாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, அதை ஆன்லைன் மூலமாகவே மிக எளிமையாக மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
* முதலில், ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, ‘மை ஆதார்’ (My Aadhaar) என்ற பிரிவில் உள்ள ‘தொலைந்த அல்லது மறந்த UID/EID-யை மீட்டெடு’ (Retrieve Lost or Forgotten UID/EID) என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்களது முழுப் பெயர், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி, மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, திரையில் தோன்றும் கேப்சா குறியீட்டையும் சரியாக உள்ளிடவும்.
* பின்னர் ‘ஓ.டி.பி. அனுப்பு’ (Send OTP) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சமர்ப்பிக்கவும்.
* இந்த எளிய படிகளைப் பூர்த்தி செய்த உடனேயே, உங்களது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் திரையில் காட்டப்படும். அத்துடன், உங்களது ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?
ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படாமல் இருந்தால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அங்கு, ஆதார் அட்டை எடுத்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட 28 இலக்க EID (பதிவு எண்) எண்ணை வழங்க வேண்டியிருக்கும். அத்துடன், கைரேகை அல்லது கண் கருவிழி ஸ்கேன் போன்ற உயிரியல் தரவுகள் (Biometric) மூலமாக உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந்தச் சேவைக்காகச் சிறிய தொகையாக சுமார் ரூ.30 வரை கட்டணமாக வசூலிக்கப்படலாம். இந்தக் கட்டணத்தைச் செலுத்தி, உங்களது இ-ஆதார் நகலை பெற்றுக் கொள்ளலாம்.



