தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு அதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக உள்ளனர்.. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 21 மாதங்களில் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.8.7 கோடியை இழந்தார்.
அன்பு, அனுதாபம் மற்றும் நெருக்கடி என்ற பெயரில் 734 வங்கி பரிமாற்றங்கள் மூலம் 4 பெண்களால் விரித்த போலி பாச வலையில் அந்த முதியவர் சிக்கி உள்ளார்.. இந்த மோசடி எப்படி நடந்தது என்று பார்க்கலாம்..
பேஸ்புக் நண்பர் கோரிக்கையால் வந்த வினை
இந்த மோசடி கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.. அந்த முதியவர் ஷர்வி என்ற பெண்ணுக்கு பேஸ்புக் நண்பர் கோரிக்கையை அனுப்பினார். ஆரம்பத்தில் அவர் கோரிக்கையை நிராகரித்தாலும், பின்னர் சில நாட்களுக்குப் பிறகு முதியவரின் நண்பர் கோரிக்கையை அந்த பெண் ஏற்றுக்கொண்டார்.. இருவரும் பேஸ்புக்கில் நண்பராக மாறிய பிறகு, விரைவில் வாட்ஸ்அப்-ல் சேட் செய்ய தொடங்கினர்..
தனது குழந்தைகளுடன் வசிக்கும் விவாகரத்து பெற்ற தாய் என்று தன்னை ஷர்வி கூறிக்கொண்டார். நாட்கள் செல்ல செல்ல, அவசரநிலை, தனது குழந்தையின் நோய், வீட்டுப் பிரச்சனைகள் மற்றும் பிற தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பணம் கேட்கத் தொடங்கினார். உண்மையான தேவை உள்ள ஒருவருக்கு அவர் உதவுவதாக நம்பி, அந்த முதியவரும் தொடர்ந்து பணம் அனுப்பத் தொடங்கினார்.
கவிதா என்ற மற்றொரு பெண், ஷர்வியைத் தனக்குத் தெரியும் என்றும், முதியவருக்கு அறிமுகமாகி உள்ளார்.. அப்போது தான் இந்த மோசடி அதிகரித்தது. கவிதா முதியவரின் நம்பிக்கையையும் பாசத்தையும் பெறுவதற்காக வெளிப்படையான பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பினார், பின்னர் பெரும்பாலும் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அவசரநிலைகள் என்ற பெயரில் பணத்திற்கான கோரிக்கைகளையும் அனுப்பத் தொடங்கினார்.
டிசம்பர் 2023 இல், ஷர்வியின் சகோதரி என்று கூறிக்கொண்ட டினாஸ் ஒரு பெண் அந்த முதியவரை தொடர்பு கொண்டார். அப்போது. ஷர்வி இறந்துவிட்டதாக முதியவரிடம் தெரிவித்தார், ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு, தனது மருத்துவக் கட்டணங்களை முதியவர் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பியதாக டினாஸ் கூறினார்.. வாட்ஸ்அப் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை அனுப்பினார். இதனால் முதியவர் பணம் செலுத்த ஒப்புக்கொண்டார்.. ஒரு கட்டத்தில், முதியவர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது தற்கொலை செய்து கொள்வேன் என்று டினாஸ் மிரட்டல் விடுத்தார்.
இந்த மோடடியில் கடைசியாக வந்தவர் ஜாஸ்மின், அவர் தன்னை டினாஸின் தோழி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உதவிக்காக மன்றாடினார். ஏற்கனவே தனது வாழ்நாள் சேமிப்பை வழங்கியிருந்தாலும், அந்த முதியவர் ஜாஸ்மினுக்கும் பணம் அனுப்பினார். தொடர்ந்து உதவ வேண்டும் என்ற தீவிர முயற்சியில், அவர் தனது மருமகளிடமிருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
உண்மை எப்போது வெளிவந்தது?
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், அந்த முதியவர் 734 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். மொத்தம் ரூ.8.7 கோடி அனுப்பி உள்ளார்.. இறுதியாக அவர் தனது மகனிடம் ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மகன் அவரிடம் விசாரிக்கத் தொடங்கியபோது, மோசடியின் முழு அளவும் வெளிப்பட்டது.
முதியவர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. மருத்துவர்கள் பின்னர் அவருக்கு டிமென்ஷியா இருப்பதாகக் கண்டறிந்தனர், இது நினைவாற்றல் மற்றும் முடிவெடுப்பதைக் குறைக்கும் ஒரு நிலை, இது அவரை மோசடிக்கு ஆளாக்கியிருக்கலாம்.
ஜூலை 22, 2025 அன்று, பாதிக்கப்பட்ட முதியவர் 1930 சைபர் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டார். ஆகஸ்ட் 6 அன்று கட்டுப்பாட்டு அறை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. அவரின் வாட்ஸ் அப் சேட்களில் 4 வெவ்வேறு பெண்களின் பெயர்கள் வெளிவந்தாலும், அனைத்து அடையாளங்களும் ஒரே நபர் அல்லது குழுவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது இந்த மோசடி தொடர்பாக சைபர் விசாரணை நடந்து வருகிறது.