திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன் என்ற பால் கரவை தொழில் செய்து வந்தார். அப்போது, பால் கறவைக்காகச் செல்லும் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஆர்த்தியின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
இருப்பினும், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆர்த்தியின் தந்தையான சந்திரன், மருமகன் ராமச்சந்திரன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். திருமணம் முடிந்து 5 மாதங்கள் கழிந்த நிலையில், காதல் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பால் கறவைக்காக சென்று கொண்டிருந்த ராமச்சந்திரனை, கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்த பெரியார் பாசனக் கால்வாய் பாலத்தில் சந்திரன் வழிமறித்தார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில், சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், ராமச்சந்திரனின் ஒரு கை துண்டாகி, படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாலத்திலேயே சரிந்து சம்பவ இடத்திலேயே துயரமான முறையில் உயிரிழந்தார். பின்னர், ராமச்சந்திரனின் உடலைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நிலக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரபிரபா ஆகியோர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார், மருமகனைப் படுகொலை செய்த மாமனார் சந்திரனை உடனடியாக கைது செய்தனர். கொலை நடந்த இடத்தினை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் ஆய்வு செய்தார். காதல் திருமணத் தகராறில், 5 மாதங்கள் பொறுத்திருந்து அரங்கேற்றப்பட்ட இந்தப் படுகொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலக்கோட்டை போலீசார், இந்தக் கொடூரச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



