காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்தக் கேரளத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பதின்ம வயதில் தொடங்கிய ஒரு காதல், இரு குடும்பங்களின் பிள்ளைகள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முண்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தனது பதின்ம வயதிலேயே ரஷ்மி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவளிடம் சொல்லப் பயந்து தனது காதலை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்தார். ஆனால் ரஷ்மிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது, ஜெயபிரகாஷ் வேலைக்காக வெளிநாடு சென்றார். அதன் பிறகு, ஜெயபிரகாஷுக்கும் திருமணம் ஆகி வாழ்க்கையில் செட்டிலானார். இருவரும் அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தனர்.
விதி விளையாடிய விசித்திரமான நாடகம்
10 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்மியின் கணவர் இறந்துவிட்டார், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரகாஷின் மனைவியும் காலமானார். தனிமையால் வாடிய ரஷ்மி, அந்த வலியில் இருந்து விடுபடுவதற்காகக் கலை நிகழ்ச்சிகளிலும் குறும்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். மறுபுறம், ஜெயபிரகாஷின் பிள்ளைகள் தங்கள் தந்தையின் தனிமையைக் கண்டு, அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இந்தச் சமயத்தில், ஒரு நாள் ஜெயபிரகாஷ், ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தைப் பார்த்தார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தான் காதலித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட அவர், உடனடியாக அந்தப் படத்தின் இயக்குநர் மூலம் அவரது மகளின் தொலைபேசி எண்ணைப் பெற்றார். இருவரும் பேசிக்கொண்டனர். பழைய நினைவுகள் மீண்டும் உயிர்பெற்றன. ஜெயபிரகாஷ் தனது திருமண யோசனையை ரஷ்மியிடம் முன்வைத்தார்.
பிள்ளைகளின் ஆசியுடன் ஒன்று சேர்ந்தனர்
“எங்கள் அம்மாவின் மகிழ்ச்சிதான் எங்களுக்கு முக்கியம்,” என்று ரஷ்மியின் மகளும் மருமகனும் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் மிக எளிமையான முறையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. எந்தப் பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? ரஷ்மியின் மகள் தனது தாயின் திருமணப் புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார், அது வைரலானது. தங்கள் பெற்றோரின் தனிமையைப் புரிந்துகொண்டு, அவர்களின் காதலை மதித்த இந்தப் பிள்ளைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Read More : பராசக்தி படத்திற்கும் சென்சார் சிக்கல்..! 23 இடங்களில் கட்? 10-ம் தேதி ரிலீஸ் ஆகுமா?



