தபால் துறை, தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்கள், குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர் வைப்புத் தொகை (RD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் பல முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் முக்கிய இடம் பிடிப்பது, நேர வைப்புத் தொகை திட்டமாகும்.
பொதுவாக வங்கிகளில் காணப்படும் FD திட்டங்களைப்போல் செயல்படும் தபால் நிலைய நிலையான வைப்புத் திட்டம், பல நேரங்களில் வங்கிகளை விட மேலான வட்டி விகிதங்களை வழங்குவதால் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வட்டி விகிதங்கள் :
1 வருடத்திற்கு 6.9%
2 ஆண்டுகளுக்கு 7.0%
3 ஆண்டுகளுக்கு 7.1%
5 ஆண்டுகளுக்கு 7.5%
இவற்றில் குறிப்பாக, 5 வருட திட்டத்தில் கிடைக்கும் 7.5% வட்டி, பத்திரமான வருமானத்தை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களை பெரிதும் கவர்கிறது. வங்கிகளில், மூத்த குடிமக்களுக்கு மட்டும் சிறு கூடுதல் வட்டி வழங்கப்படும் நிலையில், தபால் அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் என்பது சிறப்பு அம்சமாகும்.
மூலதனத் தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 ஆக இருக்க வேண்டும்; அதிகபட்ச வரம்பு இல்லாததால், பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் இது ஏற்றதாக இருக்கிறது. ஒரே கணக்கில் மூன்று பேர் வரை இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்டாக வைத்திருக்கலாம்.
ஒரு நபர் ரூ.1 லட்சம் மதிப்பில் 3 வருட வைப்புத் தொகை செய்தால், அவருக்கு ரூ.1,23,508 கிடைக்கும். அதாவது, ரூ.23,508 வரை வட்டியிலிருந்து பெறலாம். இது வங்கிகளுடன் ஒப்பிடும்போது மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் உள்ளது.
நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுச் சூழ்நிலையை விரும்புபவர்களுக்கு, தபால் நிலைய FD திட்டங்கள் நல்ல தேர்வாக திகழ்கின்றன. அரசு உத்தரவாதம், உயர் வட்டி விகிதம் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவை இந்தத் திட்டங்களை சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகின்றன.
Read More : வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாட்டில் முதல்முறையாக கணக்கெடுப்பு பணி..!!