வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ள நிலையில் 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது..
தமிழகத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.. தமிழகம் முழுவதும் பரவலகா கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது..
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது..
குறிப்பாக நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..