ஸ்பெயினின் பலேரிக் தீவுகளில் உள்ள ஃபார்மென்டெரா கடற்கரையில் டா வின்சி என்ற 91 அடி உயர சொகுசு சூப்பர் படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்த போது படகில் நான்கு பயணிகள், இரண்டு பணியாளர்கள் மற்றும் கேப்டன் உட்பட ஏழு பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பெயினின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நிறுவனமான சால்வமெண்டோ மரிட்டிமோ வெளியிட்ட காட்சிகளில், படகு முழுவதுமாக தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், அடர்த்தியான கரும்புகை வானத்தில் எழுவதையும் காட்டியது. படகு தண்ணீரில் அசையும்போது கேபின்கள் வழியாக தீப்பிழம்புகள் பரவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
தகவல்களின்படி, தீ இயந்திர அறையில் தொடங்கி கப்பல் முழுவதும் வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. மீட்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு படகில் இருந்தவர்களை மாற்று படகு மூலம் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதபோதிலும், தீயை அணைக்க முடியாமல் கப்பல் முற்றிலும் சேதமடைந்து மூழ்கியது.
டா வின்சி, 1997 மற்றும் 2004 க்கு இடையில் கட்டப்பட்ட ஆஸ்டன்டோவா 95 GLX தொடரின் ஒரு பகுதியாகும். இது ஆடம்பர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் உரிமையாளரின் அறை உட்பட பத்து விருந்தினர்களுக்கு இடமளிக்க முடியும். இந்த சம்பவம் இபிசாவிற்கு விடுமுறைக்குச் செல்லும் மக்களுக்கான பிரபலமான பகல் நேரப் பயண இடமான ஃபார்மென்டெராவிலிருந்து தென்மேற்கே 7.3 மைல் தொலைவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.