அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது..
சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய காவல் ஆய்வாளர், டிஎஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.. பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் அளிக்கவில்லை.. மாவட்ட எஸ்.பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.. அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை..” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. இந்த வழக்கை நீர்த்துப் போக செய்தால், நீதித்துறை தலையிட வேண்டியிருக்கும்.. அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மதியம் 2.15 ஒத்திவைத்தனர்.. மேலும் விசாரணை அறிக்கையை மதியம் 2.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அஜித் குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் “ சாதாரண கொலை வழக்கு போல் இல்லை, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்திருக்கிறது. அதிகாரமே இத்தகைய மனநிலையை காவல்துறையினருக்கு தந்திருக்கிறது.
இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை வேண்டும்? அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளன.. அவர் உடலில் ஒரு பாகத்தை விடாமல் தாக்கி உள்ளனர். கடுமையான காயங்கள் உள்ள நிலையில் இறக்கும் வரை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்படவில்லை.. எஃப்.ஐ.ஆர் பதியாமல் சிறப்புப்படை எப்படி வழக்கை கையில் எடுத்தது? இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது கொடூரமாக இருக்கிறது. ” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்கிறோம் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அதற்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறியதை தொடர்ந்து இதனை கேட்ட நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் தருகிறோம் என்று தெரிவித்தனர்..
மேலும் “ அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார்.. அஜித் தாக்கப்படும் வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறைகள் இருந்ததா? அஜித் குமார் மீது இவ்வளவு காயங்கள் உள்ளது? எதை வைத்து அடித்தீர்கள்.. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை எஸ்.ஐ ஒருவர் எடுத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் ஏன் விசாரணை நடத்தவில்லை..?
அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.. உயரதிகாரிகளை பாதுகாக்கும் பொருட்டு அரசின் நடவடிக்கை உள்ளது.. அரசு தாக்கல் செய்த அறிக்கையில் அவ்வளவு ஓட்டைகள் உள்ளது.. இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்துவிடுவீர்கள்.. காவலர்கள் கைது செய்தது என்பது கண் துடைப்பு நடவடிக்கை தான்.. வரும் காலங்களில் காவல்துறையினர் யாரும் இப்படி நடந்து கொள்ளக்கூடாது.. கல்வியறிவு அதிகம் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது வியப்பாக உள்ளது.. பல இடங்களுக்கு கொண்டு சென்று அடித்து தாக்கி உள்ளனர். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. நகை திருட்டு புகாரில், தங்க நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை.. அந்தரங்க உறுப்புகளிலும், முகத்திலும் மிளகாய் தூளை தூவியுள்ளனர்.. கொலைகாரர் கூட இவ்வளவு கொடூரமாக தாக்கமாட்டார்.. ” என்று காட்டமாக கேள்விகளை எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு, எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக முயல்கின்றனர் என்று தெரிவித்த போது, நீதிபதிகள் “ நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதை தான் செய்வீர்கள் என்று தெரிவித்தனர்.. மேலும் “ 28-ம் தேதி மாலை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.. 3 திமுக நிர்வாகிகள், டிஎஸ்பி உடன் சேர்த்து சமரசம் பேசி உள்ளீர்கள்.. ரூ.50 லட்சம் பேரம் பேசி உள்ளீர்கள்..” என்று தெரிவித்தனர்.
நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறிய நீதிபதிகள் அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர்.. திருப்புவனம் காவல் ஆய்வாளர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.. ஜூலை 8-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் அதுவரை வழக்கு தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதியின் நேரடி விசாரணையின் கீழ் நடைபெற உள்ளது..
Read More : அஜித் மரணம் ‘லாக் அப் டெத்’ கிடையாது.. சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிடாதீங்க..!! – அமைச்சர் ரகுபதி