கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியில், மீன்களால் பிரசித்தி பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 70 கி.மீ., பாலக்காட்டில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனே மீன்குளத்தி பகவதி அம்மனாக அவதரித்து அருள்பாலிப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்த வீரசைவ வேளாளர் சமூகத்தினர் வைர வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். பஞ்சத்தால் வாழ்க்கை சிரமமானதால், தங்கள் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை வணங்கிச் சென்ற பின்னர், பல்லசனாவில் தங்கி வணிகத்தில் செழித்து வாழ்ந்தனர்.
ஒரு முறை வணிகர், மதுரை செல்லும் முன் குளம் அருகே பொருட்களை வைத்து நீராடச் சென்றார். திரும்பி வந்தபோது பொருட்களை எடுக்க முடியாமல் தவித்தார். அப்போது அசரீரி ஒலி எழுந்தது: “இந்த தள்ளாடும் வயதில் என்னை தரிசிக்க மதுரை வர வேண்டாம் உனக்காக நானே இங்கு வந்துள்ளேன்” என்று ஒலித்தது .இதனால் அம்மனுக்கு அங்கேயே கோவில் எழுப்பினர். கோவில் கருவறைக்குள் அம்மன் பகவதி அம்மனாக அருள் பாலிக்கிறார் . மீன்கள் அதிகமாக விளையாடும் குளத்தின் அருகே தோன்றியதால் மீன்குளத்தி பகவதி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்பு நம்பிக்கைகள்:
* பைரவர் சன்னதியில் தேங்காய் வாங்கி தலையைச் சுற்றி சிதறுதேங்காய் உடைத்தால் கண் திருஷ்டி, தோஷங்கள் நீங்கும்.
* குளத்தில் நீராடி அம்மனை தரிசித்தால் திருமணத் தடைகள் நீங்கும்.
* வணிகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வழிபட்டால் வணிக வளர்ச்சி ஏற்படும்.
* பஞ்சத்தில் சிக்கியவர்கள் பசியாறி செல்வ வளம் அடைந்தனர் என்பது கோயிலின் பெருமையாக சொல்லப்படுகிறது.
ஆண்கள் கோவிலுக்குள் மேல்ஷட்டை, பனியன் அணிந்து வரக்கூடாது. வேஷ்டி கட்டியே உள்ளே செல்ல அனுமதி உண்டு. புதிய தொழிலைத் தொடங்குபவர்கள், அல்லது தொழிலில் தடை, தோல்வி அனுபவிப்பவர்கள் மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தொழில் தடை நீங்கி செல்வ வளம் பெருகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.