திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ரயில்களில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.. இது ரயில்வே ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ரயிலை சுத்தப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஹிசாரில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு ரயிலில் (04717) இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த ராயலசீமா எக்ஸ்பிரஸ் மற்றும் ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் தீ விபத்தால் சேதமடைந்தன..
இன்று இரண்டு பெட்டிகளில் இருந்து அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளியேறிது.. சில நிமிடங்களில், தீ தீவிரமடைந்து, பெட்டிகள் முற்றிலுமாக எரிந்தன. அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்த நேரத்தில் ரயில்கள் காலியாக இருந்ததால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர குழுக்கள் விரைவாக செயல்பட்டன. தீயை முழுமையாக அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்தது.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது.
தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.. மின்சார ஷார்ட் சர்க்யூட் அல்லது அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், ஆனால் முறையான விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பெட்டிகளுக்குள் பயணிகள் யாரும் இல்லை என்றாலும், சொத்து இழப்பு கணிசமானது. எரிந்த ரயில் பெட்டிகள் தற்போது தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தீ பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பெட்டிகள் ரயிலின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டன.
நேற்று திருவள்ளூர் அருகே ஒரு கச்சா எண்ணெய் சரக்கு ரயிலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பான சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில் மற்றொரு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.