மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் அண்மையில் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இருவருக்கிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
மேலும் மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவர் தொடர்பு வைத்துள்ளார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார் என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.