அமெரிக்காவில் 60 வயதான ஒருவர், தனது உணவில் இருந்து உப்பை எவ்வாறு அகற்றுவது என்பதை ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டிடம் கேட்டார். உப்பின் எதிர்மறை உடல்நல விளைவுகள் குறித்து படித்திருந்த அவர், AI-யின் ஆலோசனையைத் தொடர்ந்து தனது உணவுமுறையில் பெரிய மாற்றம் செய்தார். உப்பை முழுவதுமாக நீக்கி, அதற்குப் பதிலாக 1900களின் ஆரம்பத்தில் சில மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட சோடியம் புரோமைடு என்ற வேதிப்பொருளை பயன்படுத்த ஆரம்பித்தார்.
முன்னொரு காலத்தில் தூக்கமின்மை, பதட்டம், சில நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்ட சோடியம் புரோமைடு, இன்று அதிக அளவில் நச்சுத்தன்மை உள்ளதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. இருந்தும், அந்த நபர் மூன்று மாதங்களாக ஆன்லைனில் வாங்கிய இந்த வேதிப்பொருளை உணவில் பயன்படுத்தி வந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு அவர் கடுமையான நரம்பியல் மற்றும் மனநல அறிகுறிகளை சந்தித்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் எந்த மருந்துகளையும் அல்லது சப்ளிமெண்ட்களையும் எடுத்துக்கொள்ளவில்லை என மறுத்தார். பின்னர், உப்புக்கு பதிலாக சோடியம் புரோமைடு பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். மேலும், வீட்டில் தண்ணீரை காய்ச்சி வடிகட்டி மட்டுமே குடிப்பதாகவும் கூறினார்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு புரோமிசம் (bromism) எனப்படும் புரோமைடு நச்சுத்தன்மை ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தினர். உடல் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சீர்செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை சீராகிய பின் அவர் மனநலப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் American College of Physicians வெளியிட்ட வழக்கு அறிக்கையில் இடம்பெற்றது.
அறிக்கையில், ChatGPT உட்பட AI சாட்போட்கள் மருத்துவ ஆலோசனையில் தவறான அல்லது முழுமையற்ற தகவலை வழங்கி, பயனர்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் உணவுமுறை தொடர்பான முக்கிய முடிவுகளை AI ஆலோசனையின் அடிப்படையில் எடுக்காமல், தகுதி பெற்ற மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களிடம் மட்டுமே ஆலோசனை பெற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
Read more: இரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா? மாதம் ரூ.44,900 சம்பளம்.. செம சான்ஸ்.. எப்படி விண்ணப்பிப்பது..?