அஜித் குமார் மரண வழக்கு பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலிப்பு காரணமாக அஜித்குமார் உயிரிழந்தார் என FIR பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய காவல் ஆய்வாளர், டிஎஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.. பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் அளிக்கவில்லை.. மாவட்ட எஸ்.பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.. அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை..” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. இந்த வழக்கை நீர்த்துப் போக செய்தால், நீதித்துறை தலையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்.. முதலமைச்சர் சொன்ன பதில்..