பாட்டாளி மக்கள் கட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அவர்களே, தங்களது அடையாளமாக கருதப்படும் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை ராமதாஸுக்கும், கட்சியின் தலைவரும் மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி இப்போது வீதிக்கு வந்துள்ளது.
பாமக ஒரு அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தொழில்நுட்ப ரீதியிலான காரணத்தைச் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், கட்சியின் நிர்வாகப் பதவிக்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். உட்கட்சி மோதல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை, ‘மாம்பழம்’ சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்றும், அதை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கணக்குகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளில் தீவிரமாகச் செயல்பட வேண்டிய சூழலில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே எழுந்துள்ள இந்த ‘ஈகோ’ மோதல் பாமக தொண்டர்களை நிலைகுலைய செய்துள்ளது. பல தசாப்தங்களாக மருத்துவர் ராமதாஸின் சொல்லே வேதவாக்காக இருந்த கட்சியில், தற்போது அவரே சின்னத்தை முடக்க கோருவது கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
Read More : தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ தேதி..!! பரபரப்பு தகவல்..!!



