ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாத சுக்ல அஷ்டமி நாளில் ராதா அஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமிக்குப் பிறகு 15 நாட்களுக்கு பிறகு வரும் இந்த நாளில், கிருஷ்ணரின் நித்திய துணைவி ராதா தேவியின் பிறப்பு நினைவு கூறப்படுகிறது. கிருஷ்ணரின் வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் மக்களுக்கு தெரிந்திருந்தாலும், அவரின் காதலி ராதா தேவியின் வாழ்க்கை மற்றும் மறைவு குறித்த தகவல்கள் பெரும்பாலோருக்கு தெரியாது.
ராதா, விருஷபானு மற்றும் கீர்த்திலா ஆகியோருக்கு விருந்தாவனத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே கிருஷ்ணரை முதன்முதலாகக் கண்ட அவர், அவரிடம் ஆழ்ந்த பாசமும் அன்பும் கொண்டார். அதே நேரத்தில் கிருஷ்ணரும் ராதாவை நேசித்தார். இருவரின் காதல் சிறுவயதிலிருந்தே தொடங்கியது. ஆனால் அந்த காதல் திருமணமாக முடியவில்லை.
கம்சனைக் கொல்ல மதுரா சென்ற கிருஷ்ணர், பின்னர் பிருந்தாவனத்திற்குத் திரும்பவில்லை. உலக நன்மைக்காகவும், பாண்டவர்களுடன் அரசியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், ராதாவும் கிருஷ்ணரும் வாழ்நாள் முழுவதும் விலகியே இருந்தனர். பெற்றோரின் ஆலோசனையின்படி ராதா ஒரு யாதவரை மணந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஒரு மகனும் பிறந்ததாக சில கதைகள் கூறுகின்றன. ஆனால் அவளது மனமும் ஆன்மாவும் கிருஷ்ணரிலேயே ஒன்றிணைந்திருந்தன.
வயதான பின்பு, ராதா ஒருமுறை துவாரகையில் கிருஷ்ணரைச் சந்தித்தார். அவளை பார்த்ததில் கிருஷ்ணர் மகிழ்ந்து, தனது எட்டு மனைவியரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர், அரண்மனையில் ஒரு முக்கிய பொறுப்பை ராதாவுக்கு அளித்தார். ஆனால், மற்றொருவரின் மனைவியாக இருந்த நிலையிலும் கிருஷ்ணரை நேசிப்பது அவளுக்கு தாங்க முடியவில்லை. இதனால், அரண்மனையை விட்டு வனப்பகுதிக்குச் சென்று தனியாக வாழத் தொடங்கினார்.
வயதான நிலையில் பலவீனமடைந்த ராதா, இறுதிக் கணங்களில் கிருஷ்ணரை நினைவு கூர்ந்தார். அப்போது பகவான் கிருஷ்ணர் அவளின் முன் தோன்றி, அவள் கேட்டபடி புல்லாங்குழல் வாசித்தார். அந்த மெல்லிசையை கேட்டபடி, ராதா தன் உயிரை விட்டார். ராதாவின் மறைவைத் தாங்க முடியாமல், கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை உடைத்தார். அதன் பின் அவர் புல்லாங்குழலை எப்போதும் வாசிக்கவில்லை.
திருமணமாகாத காதல் என்றாலும், ராதா மற்றும் கிருஷ்ணரின் உறவு இன்றுவரை நித்திய அன்பின் அடையாளமாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ராதா அஷ்டமி தினத்தில், பக்தர்கள் இருவரின் தெய்வீக அன்பை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.
Read more: “தமிழர் முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்கிறது..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!