பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. எனினும் இதில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. அந்த வகையில் தற்போது இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.குவெட்டா பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். குண்டுவெடிப்பு காரணமாக, குவெட்டா மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்தார். அனைத்து மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் போன்றோர் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் 19 பேர் காயமடைந்ததாக பலுசிஸ்தான் சுகாதாரத் துறையின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது, இதில் சாலையில் வாகனங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்து, சாலையில் பலரைத் தாக்கியது.
இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. கடந்த 4 ஆம் தேதி, குவெட்டாவில் ஒரு அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



