கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ‘கூகுள் பிக்சல் 9a’ (Google Pixel 9a), தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குடியரசு தின சிறப்பு விற்பனை முடிவடைந்த பின்னரும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த அதிரடிச் சலுகையைத் நீட்டித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விலை குறைப்பு மற்றும் அதிரடிச் சலுகைகள் :
இந்தியாவில் ரூ.49,999 என்ற விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000 நேரடித் தள்ளுபடியுடன் ரூ.39,999 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கிரெடிட் கார்டு பயனாளர்களுக்குக் கூடுதலாக ரூ.3,000 உடனடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் போனின் ஆரம்ப விலை ரூ.36,999 ஆகக் குறைகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer) மூலம் சுமார் ரூ.10,000 வரை மதிப்பு கிடைத்தால், இந்த பிரீமியம் போனை வெறும் ரூ.26,999 என்ற கனவு விலையில் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.23,000 வரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் :
கூகுள் பிக்சல் 9a போன் 6.3 இன்ச் pOLED டிஸ்பிளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை நேரடி சூரிய ஒளியிலும் திரையை தெளிவாக காண உதவுகின்றன. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் இதில் உள்ளது. கூகுளின் அதிநவீன ‘டென்சர் ஜி4’ (Tensor G4) சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பணிகளை மிக வேகமாகவும் துல்லியமாகவும் கையாளும் திறன் கொண்டது.
கேமரா மற்றும் பேட்டரி பலம் :
புகைப்பட கலைஞர்களை கவரும் வகையில், இதில் 48MP பிரைமரி கேமரா (OIS வசதியுடன்) மற்றும் 13MP அல்ட்ரா-வைட் கேமரா என இரட்டை கேமரா அமைப்பு பின்பக்கத்தில் உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க ஏதுவாக 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் போனை பயன்படுத்துபவர்களுக்குப் பயனுள்ள வகையில், 5,000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பேட்டரி நீடிக்கும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.


