புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விளாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா (28), தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலையும் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை செல்வராஜ், மகளை தேடி வயல் பகுதிக்குச் சென்றார்.
அப்போது விளாபட்டி – பாக்குடி சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு பகுதியில் கௌசல்யா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அன்னவாசல் காவல்துறையினர், கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட ஆய்வில், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதும் தென்படவில்லை. இருப்பினும், உயிரிழக்கும் தருவாயில் அவர் கடும் போராட்டத்தை எதிர்கொண்டிருப்பார் என்பதை உணர்த்தும் வகையில், அவரது கைகளில் புற்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சிக்கியிருந்தன. மேலும் அவரது நாக்குச் சற்று வெளியே தள்ளிய நிலையில் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வெறிச்சோடிய பகுதியில் தனியாக இருந்த பெண்ணைக் கண்ட மர்ம நபர்கள் யாரேனும் இக்கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மேய்க்க சென்ற இளம்பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



