கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது.. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணைய விசாரணையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பின்னர் 15 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் நேற்று விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பது தொடர்பாக விஜய் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட விஜய் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாம்..
41 குடும்பங்களையும் தனித்தனியாக சந்திக்காமல் ஒரே அரங்கில் சந்திக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. இதற்காக திருமண மண்டபம் போன்ற இடத்தில் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.