தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர்.
விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றியை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக டிடிவி தினகரன் கூறுகையில், மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 2006 தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே, விஜய் 2026 தேர்தலில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்குவார் என்றும் விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றும் கூறியிருந்தார்.
அதேபோல் தொலைபேசி மூலம் சமாதானம் செய்த நயினார் நாகேந்திரனிடம் ஓபிஎஸ் பிடி கொடுக்காமல் பேசியுள்ளார். இதனால், ஓபிஎஸ், டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.