தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1,69,4339 பெண்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இத்திட்டம் தொடர்பான ஒரு முக்கிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சூசகமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகை முடிவதற்குள் முதல்வர் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிடுவார். அது பெண்களுக்கு ஒரு பொங்கல் பரிசாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளது, உரிமைத் தொகை உயர்த்தப்படப் போவதையே மறைமுகமாக உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டார தகவல்களின்படி, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை 1,500 ரூபாயாகவோ அல்லது 2,000 ரூபாயாகவோ உயர்த்த தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பொங்கல் திருநாளிலோ அல்லது வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலோ வெளியாக வாய்ப்புள்ளது. வரவிருக்கும் தேர்தலில் பெண் வாக்காளர்களின் ஆதரவை தக்கவைக்க திமுக கையிலெடுத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக இத்திட்டம் கருதப்படுகிறது. இது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
பயனாளிகளுக்கு மற்றொரு நற்செய்தியாக, ஜனவரி மாதத்திற்கான உரிமைத் தொகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்படும் இந்தப் பணம், இந்த முறை பொங்கல் செலவுகளுக்கு உதவும் வகையில் ஜனவரி 9-ஆம் தேதியே வங்கித் கணக்குகளில் வரவு வைக்கப்பட தொடங்கியுள்ளது. இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், பொதுமக்கள் 044-25619208 என்ற எண்ணை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : FLASH | அடங்காத இலங்கை கடற்படை..!! தமிழக மீனவர்கள் 8 பேர் அதிரடி கைது..!! மீண்டும் பதற்றம்..!!



