தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள இந்தத் தொகையை உயர்த்தி வழங்க ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கும் விதமாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “வருகிற பொங்கல் பண்டிகை முடிவதற்குள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ஒரு தித்திப்பான செய்தியை அறிவிப்பார்; அவர்களுக்கு ஒரு மெகா பொங்கல் பரிசு காத்திருக்கிறது” எனச் சூசகமாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத் தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதற்கான அறிவிப்பையும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பொங்கல் திருநாளான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



