44 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தொழிலதிபர், சர்வதேச விமானப் பயணத்தின் போது 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையிலிருந்து சூரிச் நோக்கி சென்ற 9 மணி நேரப் பயணத்தின் போது, தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் சிறுமியை பார்த்தபோது “தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபருக்கு ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அது இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக (suspended sentence) வழங்கப்பட்டதால், அந்த நபர் விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த அருவருப்பான சம்பவம் 2025 மார்ச் 17ஆம் தேதி நடந்தது. சிறுமி தூங்குவதற்கு முன் சிறிது நேரம் அந்த நபருடன் பேசியுள்ளார். பின்னர், சூரிச் தீவிர வன்முறை குற்றப்பிரிவு வழக்கறிஞர் அலுவலகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அந்த நபர் சிறுமியை அணைத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் தொட முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தக் குழந்தை பேசவோ, எதிர்க்கவோ முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் தனது அருவருப்பான செயல்களைத் தொடர்ந்து, சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, உடையினுள் கை வைக்க முயன்றார். நடந்ததை உணர்ந்த சிறுமி தன்னுடையான துணிச்சலுடன், சம்பவத்தை உடனே விமானப் பணியாளரிடம் தெரிவித்தார். அதன்பின், பணியாளர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். சிறுமி வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டார்; அந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். விமானம் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, அவள் ஒரு மைனர் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவளுடைய வயது என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் அந்த நபர் ஒப்புக்கொண்டார். அவர் தாக்குதல் செய்ததையும், சிறுமி எந்த சம்மதமும் அளிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். அதிலும், “நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை” என்று வாக்குமூலம் அளித்தார்.
பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தையுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்றம் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தது. இருந்தபோதிலும், அவர் இடைநிறுத்தப்பட்ட தண்டனை அளிக்கப்பட்டதால் சிறைவாசமின்றி சுதந்திரமாக விடுவிக்கப்பட்டார். அவர் மார்ச் மாதம் முதலே காவலில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சிறார்களைச் சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் அவர் வாழ்நாள் முழுவதும் ஈடுபடத் தடைசெய்யப்பட்டார். அத்துடன், £8,250 மதிப்புள்ள நீதிமன்றச் செலவினங்களை அவர் கட்ட உத்தரவிடப்பட்டார். இறுதியாக, அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக சுவிஸ் குடியேற்ற அலுவலகத்தின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டார்.