திமுக மூத்த நிர்வாகியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேருவின் துறை தொடர்பான ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, அமைச்சரின் துறையில் நடந்த பணியிட நியமனங்களில் ரூ.888 கோடி வரையிலும், டெண்டர் விவகாரங்களில் ரூ.1,020 கோடி வரையிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் மீதான நடவடிக்கைகள் குறித்துப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஐரோப்பிய நாடான இத்தாலிக்குச் சென்றுள்ளார். அங்கே, பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்ட விரோதப் பணத்தை முதலீடு செய்வது தொடர்பாக சில முக்கிய நபர்களைச் சந்தித்துப் பேசியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அமைச்சர் நேருவின் துறையில் உள்ள டெண்டர்களை எடுத்துத் தருவதாகக் கூறி, 4 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது, ரவிச்சந்திரன் மற்றும் இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்துக்கு துணை நின்ற நபர்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணை, வெளிநாட்டில் முதலீடு செய்தது என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளதால் இந்த வழக்கு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



