கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 17,584 மெகா வாட் ஆக கடந்த 4-ம் தேதி பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் இதே நேரத்தில் பதிவான 17,563 மெகா வாட்டை விட 21 மெகா வாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொண்டது. வரக்கூடிய நாட்களில் மின்நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு 24×7 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தினை வழங்குவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகா வாட்டிலிருந்து 17,500 மெகா வாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகா வாட்டிலிருந்து 18,100 மெகா வாட் ஆக அதிகரிக்கலாம். வருகின்ற மே மாதத்தில் 17,400 மெகா வாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2022-ல் 17,563 மெகா வாட்டாக இருந்த மின்பயன்பாடு ஏப்ரல் 2023-ல் 18,500 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கடந்த மே 2022-ல் 16,750 மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு மே 2023-ல் 18,000 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,500 மெகா வாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் ஒன்றிய தொகுப்புகளின் மூலம் 8,959 மெகா வாட்டும், தமிழ்நாட்டிலுள்ள காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,750 மெகாவாட்டும், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் தினசரி 2,752 மெகா வாட்டும், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 650 மெகா வாட்டும், கோடை காலத்தில் மின் கொள்முதல் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12 முதல் ரூ.20 வரை இருந்ததைக் கருத்தில் கொண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறுகியகால ஒப்பந்தப்புள்ளி மூலம் இந்த ஆண்டு 1,562 மெகாவாட் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு ரூ.8.50 என்ற விலையில் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.1,312 கோடி சேமிப்பு கிடைக்கப் பெறும். மேலும், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவது குறைக்கப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கோடைகால மொத்த மின்தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு கோடைகாலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைளையும் எடுத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.