விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
மேலும் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.. இதனால் ஜனவரி 21 வரை ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழை வழங்காமல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து மோடியை விமர்சித்திருந்தது.. மோடிக்கு தைரியம் இருந்தால் நடிகர் விஜய்யோடு அல்ல, அரசியல்வாதி விஜய்யோடு மோத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
அதே போல் காங்கிரஸ் எம்.பிக்கள், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய எம்.பிக்கள் மத்திய அரசை விமர்சித்திருந்தனர்..ஜனநாயகன் படத்தை திரையிட விடாமல் சென்சார் போர்டு மூலம் பிரதமர் மோடி தடுப்பதாக ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவத்தி குற்றச்சாட்டி இருந்தார்..
இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “ தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். திரு. மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்.” என்று பதிவிட்டுள்ளார்..
ராகுல்காந்தியின் இந்த பதிவை காங்கிரஸ் எம்.பிக்கள் பலரும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.. மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆகிய காங்கிரஸ் எம்.பிக்கள் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்..



