கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், காவல்துறையினருக்கே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட அந்தப் பெண்ணின் 14 வயது மகனே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுவன், நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவனது தாய் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.
ஏற்கனவே அந்தச் சிறுவன் நன்றாகத்தான் படித்து வந்த நிலையில், தாயின் தொடர்ச்சியான அறிவுரைகள் அவனுக்கு எரிச்சலூட்டியுள்ளன. ஒரு கட்டத்தில் தாயின் வற்புறுத்தலை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது தாயையே கத்தியால் குத்தியுள்ளார்.
நன்றாகப் படித்து வந்த ஒரு மாணவன், தாயின் கண்டிப்புக்காக இப்படியான கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



