மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்ற இவருக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
எனினும், அமைச்சர் பொறுப்பில் நீடிப்பதில் சுரேஷ் கோபிக்கு விருப்பமில்லை என்பதும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாகவும் வெளிப்படையாக அறிவித்து வந்தார். தற்போது இந்த விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சுரேஷ் கோபி, “நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மனதாரத் தயாராக இருக்கிறேன். எனக்குப் பதிலாக, கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி. சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன். சதானந்தன் மாஸ்டர் ஒரு மூத்த தலைவர். அவருக்குப் பொறுப்பு வழங்குவது வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு புத்துணர்வை அளிக்கும். சதானந்தனின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக மாற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் ஒருபோதும் மத்திய அமைச்சராக வேண்டும் என்று விரும்பவில்லை. எனது திரைத்துறை வாழ்க்கையை விட்டுவிடவும் விரும்பவில்லை” என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், திரைப்படங்களில் நடிக்காததால் தனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சுரேஷ் கோபியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சதானந்தன் மாஸ்டர், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற ஆசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான இவர், கடந்த ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், 2021 ஆம் ஆண்டு கேரளா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
குறிப்பாக, 1994 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் நடந்த வன்முறையில் இவர் தனது இரு கால்களையும் இழந்தவர் ஆவார். இத்தகைய பின்னணியைக் கொண்ட மூத்த தலைவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே சுரேஷ் கோபியின் விருப்பமாக உள்ளது.
Read More : உங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவு வெச்சிக்கணுமா..? அப்படினா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!