வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) முதல் வடகிழக்கு காற்றாக முழுமையாக தமிழகத்தில் நுழைகிறது. இதன் காரணமாக, இன்று இரவு முதலே தமிழகத்தில் பருவமழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை), கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. நவம்பர் 13 முதல் 15-ஆம் தேதி வரை மழையில் சற்று இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த நாட்களில் இரவில் பனிப்பொழிவு அதிகமாகவும், பகலில் மேக மூட்டத்துடன் கூடிய வானிலையும் இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யச் சூழல் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தபடி, அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது.
முதல் அலை : இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, நவம்பர் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வடகிழக்குப் பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும். இதனால், 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி இரவு முதல் 19-ஆம் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இரண்டாம் அலை (புயல் வாய்ப்பு) : வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு, அடுத்தடுத்த தாழ்வுப்பகுதிகள் தமிழகக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி வரவிருக்கின்றன. இதில், 21-ஆம் தேதி ஒரு தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, 25-ஆம் தேதிக்குப் பின் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடையவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகளின்படி, இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு சூழல் இருப்பதாகவும், டிசம்பர் மாதம் முதல் பாதி வரையிலும் கூட நல்ல மழைக்கான சூழல் நிலவும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் மாற்றம்..!! குரு, சனியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை..!!



