நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காக தபால் அலுவலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் முதலீடு செய்தவுடன் ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி வருமானம் பெறலாம்.
சந்தை ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படாததால், இது முழுமையாக அபாயமற்ற அரசு திட்டமாக கருதப்படுகிறது. தபால் துறை வட்டாரங்களின் தகவலின்படி, ஒருவர் கூட்டு கணக்கில் ₹10 லட்சம் டெபாசிட் செய்தால், அவருக்கு மாதந்தோறும் ₹6,167 வருமானம் கிடைக்கும். ஆண்டுதோறும் இதன் மூலம் ₹74,004 வரை சம்பாதிக்கலாம். இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதனை முடித்தவுடன், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இடைக்காலத்தில் பணம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு பணம் எடுத்தால் 2% கழித்தல், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்தால் 1% கழித்தல் விதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்றும் எளிதாக கணக்கைத் திறக்கலாம். அதற்குத் தேவையானது ஆதார் அட்டை மற்றும் சில அடையாள ஆவணங்கள் மட்டுமே. கணக்கைத் திறக்க குறைந்தபட்சமாக ₹1,000 டெபாசிட் செய்ய வேண்டும்; அதன்பின் ₹1,000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஒரே நபராகவோ அல்லது மனைவியுடன் கூட்டுக் கணக்காகவோ திறக்கலாம்.
அரசு ஆதரவு பெற்ற திட்டமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பண இழப்பிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படுவார்கள். இதனால் ஓய்வுபெற்றோர், வீட்டுத் தலைவிகள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read more: துலாம் ராசியில் சூரியன்; இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்!