தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை பெற்ற தமிழறிஞரின் மறைவுக்குப் பிறகு, அவரது வாழ்விணையர் அல்லது திருமணமாகாத மகள் / விதவை மகள் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 (உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500) தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் உதவித்தொகை பெறும் தமிழறிஞர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. ஆனால், இப்போது ஆண்டுக்கு 150 ஆக உயர்த்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தமிழறிஞர்கள், 2025-2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.11.2025 ஆகும்.
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தமிழறிஞர்கள், 01.01.2025 ஆம் தேதியன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விரிவான குறிப்பு மற்றும் இரு தமிழறிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை சான்று இணைக்கப்பட வேண்டும்.
ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் மரபுரிமையரின் (கணவன்/மனைவி) ஆதார் அட்டை நகல் தேவை. அதேபோல், மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மண்டல/மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600008 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
Read More : 3ஆம் உலகப் போர் முதல் AI தொழில்நுட்பம் வரை..!! 2026இல் நடக்கப் போகும் மிக மோசமான சம்பவங்கள்..!!