உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கானது மட்டுமல்ல, சில நேரங்களில் அது அந்தஸ்தின் அடையாளமாகவும், தங்கத்தை விட அதிக மதிப்புடைய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சில அசைவ உணவுகளின் விலையைக் கேட்டால், “இதற்குப் பதில் ஒரு கிலோ தங்கமே வாங்கிவிடலாமே” என்று நீங்கள் நினைக்கத் தோன்றும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையோடு போட்டியிடும், உலகின் டாப் 4 விலையுயர்ந்த அசைவ உணவுகள் குறித்து இங்கே காண்போம்.
வாக்யு மாட்டிறைச்சி மற்றும் லம்போகினி கோழி : ஜப்பானின் பெருமையாக கருதப்படும் வாக்யு (Wagyu) மாட்டிறைச்சி, அதன் அபாரமான மென்மை மற்றும் சுவைக்காக உலகப் புகழ்பெற்றது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழலில் வளர்க்கப்படும் இந்த மாடுகளின் இறைச்சி, ஒரு கிலோ சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் காணப்படும் அயாம் செமானி (Ayam Cemani) என்ற கருப்புக் கோழி வகை, அதன் இறகு முதல் எலும்பு வரை அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பதால் “கோழிகளின் லம்போகினி” என அழைக்கப்படுகிறது. இதன் அரிதான தன்மை காரணமாக, ஒரு கோழியின் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை எட்டுகிறது.
புளூஃபின் டுனா : கடல் உணவுப் பிரியர்களின் கனவு உணவாக இருப்பது புளூஃபின் டுனா (Bluefin Tuna) மீன். குறிப்பாக ஜப்பானிய ‘சுஷி’ உணவுகளில் இதன் வயிற்றுப் பகுதியான ‘ஓடோரோ’ மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஜப்பான் ஏலச் சந்தைகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போகும் இந்த மீனின் இறைச்சி, ஒரு கிலோ சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது. இதன் வெண்ணெய் போன்ற சுவைக்காகவே உலகெங்கிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் இதனை விரும்பி உண்கின்றனர்.
தங்கத்தை மிஞ்சும் அல்மாஸ் கேவியர் : பட்டியலின் உச்சத்தில் இருப்பது அல்மாஸ் கேவியர் (Almas Caviar). காஸ்பியன் கடலில் வாழும் அரிய வகை ‘அல்பினோ பெலுகா ஸ்டர்ஜன்’ மீனின் முட்டைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. தங்க மஞ்சள் நிறத்தில் மின்னும் இந்த கேவியர், ஒரு கிலோ சுமார் 30 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது தற்போதைய தங்கத்தின் விலையை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணக்காரர்களின் தட்டுகளை அலங்கரிக்கும் இந்த உணவுகள், அவற்றின் ருசிக்காக மட்டுமின்றி, அவை வளர்க்கப்படும் விதம் மற்றும் கிடைப்பதற்கரிய தன்மை காரணமாகவே இத்தனை லட்சங்களுக்கு மதிப்பை பெறுகின்றன.



