தற்போதைய நவீன வாழ்கையில் அனைவரும் மரங்களை வளர்த்து பராமரிக்க முடியாமல் போனாலும், சிறிய செடிகளை வளர்ப்பது ஏதுவாக உள்ளது. இது வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. அதற்கு மேலாக, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில செடிகள், நம் வீடுகளுக்குள் நன்மைகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் செடியைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பணத்தை ஈர்க்கும் செடி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மணி ப்ளாண்ட் தான். ஆனால், அதைவிட பலம் வாய்ந்தது என்று கூறப்படுவது தான் “குபேர செடி”. செல்வத்தின் கடவுளாக போற்றப்படும் குபேரரின் பெயரை பெற்ற இந்த செடியானது, செல்வ சாந்தியை ஈர்க்கும் சக்தி கொண்டதாக பல கலாச்சாரங்களிலும் நம்பப்படுகிறது.
ஆங்கிலத்தில் “ஜேட் ப்ளாண்ட்” அல்லது “கிராசுலா” என அழைக்கப்படும் இந்த செடி, வீட்டில் நவீன வாஸ்து நம்பிக்கைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த செடியை வீட்டில் சரியான இடங்களில் வைப்பது மிக அவசியமானது.
நுழைவாயில், வீட்டில் நுழையும் இடம் என்பதாலேயே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அங்கு ஜேட் செடியை வைப்பது, வீடு முழுவதிலும் நேர்மறையான ஆற்றலை பரப்பும் என நம்பப்படுகிறது. இதேபோல, அலுவலக மேசை அல்லது பணியிடங்களில் வைத்து வளர்த்தால், தொழில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், நிதி ஆதாயம் ஆகியவற்றை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.
வீட்டின் தென்கிழக்கு பகுதி வாஸ்துவில் “செல்வ மூலை” என அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் இந்த செடியை வைப்பது, பண வருவாய் மற்றும் வெற்றியை ஈர்க்கும் என்றும், வீட்டில் அமைதி மற்றும் புத்துணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், குளியலறை, சமையலறை மற்றும் படுக்கையறை போன்ற இடங்களில் இந்த செடியை வைக்கக் கூடாது. ஏனென்றால், அவை செடியின் ஆற்றலை தடை செய்யக்கூடும். மேலும், வடக்கு திசையில் வைக்கும் போது ஒரு நிபந்தனை. அந்த செடி வெளி பார்வைக்கு தெரிந்திருக்கக் கூடாது என்பதைக் கவனிக்க வேண்டும்.
வாஸ்து நிபுணர்கள் கூறுகையில், ஜேட் செடி வெறும் அடையாள சின்னம் அல்ல; உண்மையில் அது வீட்டில் வளம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரும் ஒரு சக்தி வாய்ந்த வாஸ்து அங்கமாகும். மேலும், இந்த செடி காற்றை சுத்திகரிக்கும் தன்மையும் கொண்டதால், மன அழுத்தத்தை குறைத்து, உற்பத்தித்திறன் மற்றும் கவனத்தை மேம்படுத்தும் பலன்கள் உள்ளன.
செடியின் நன்மைகள் தொடர்ச்சியாக கிடைக்க, அதை சீராக பராமரிப்பதும் அவசியம். நேரடியான வெப்பம் இல்லாமல் மறைமுகமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். மண் முற்றிலும் காய்ந்த பிறகே தண்ணீர் ஊற்ற வேண்டும். மஞ்சள் இலைகளை தவிர்த்து, செடியை பசுமையாக வைப்பது நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
Read More : இடது காலில் கருப்பு கயிறு கட்டும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா..?